July 10, 2021
தண்டோரா குழு
அண்மையில் மறைந்த சமூக போராளி ஸ்டேன் சாமிக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக கோவையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களின் உரிமைப்போராளியான, தமிழகத்தை சேர்ந்த ஸ்டேன்சாமி, மும்பை சிறையில் அண்மையில் காலமானார். இவரது மறைவிற்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக மறைந்த சமூக போராளி ஸ்டேன் சாமிக்கு வீரவணக்கம் செலுத்தி இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கோவை காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இதில்,கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஆல்வின் அருள் முன்னிலை வகித்தார்.
கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்,பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் மறைந்த சமூக போராளி அருள் தந்தை ஸ்டேன் சாமியின் உருவபடத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் தி.மு.க.கிழக்கு மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்,தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், மற்றும் தி.மு.க.கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கோட்டை அப்பாஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் இலக்கியன், மனித்நேய மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் கபீர்,ஆலயத்தின் பங்கு தந்தை குழந்தைசாமி,கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் பொருளாளர் கிறிஸ்டி,செய்தி தொடர்பாளர் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.