June 2, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு வன்முறையாக மாறுவதற்கு,தீவிரவாத குழுக்களின் ஊடுருவல் தான் காரணம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.சென்னையில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தமிழக சூழல் குறித்தும்,டெல்லியிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் குறித்தும் ஆளுனருடன் ஆலோசித்தேன்.தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.
தமிழகத்தில் பல பயங்கரவாத சக்திகள்,மக்களின் பின்னால் ஒளிந்து கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு வன்முறையாக மாறுவதற்கும் தீவிரவாத குழுக்களின் ஊடுருவல்தான் காரணம்.இதே குழுக்கள் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், உள்ளே ஊடுருவின.இதுகுறித்து உரிய விசாரணை நடத்த ஏற்கனவே நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.
அரசியலில் இருந்து நடிகர்கள் சற்று விலகியே இருக்க வேண்டும்.ரஜினியின் பேச்சுக்கள் அனைத்தும் சினிமா வசனங்கள் போன்று உள்ளன.ரஜினிகாந்த் பேசுவதற்கெல்லாம் நான் கருத்து கூற முடியாது. இன்று ஒரு கருத்தை கூறிவிட்டு நாளை வேறு கருத்தை கூறினால் நானும் அதற்கு வக்காலத்து வாங்க முடியாது எனக் கூறினார்”.