May 23, 2018
தண்டோரா குழு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் சுட்டுகொள்ளபட்ட நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் தமிழர்கள் போரட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் மீது நேற்று போலீசார் துப்பாகிச்சூடு நடத்தினர் இதில் 11 பேர் உயிரழந்தனர்.
இன்றும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இன்று நடைபெற்ற போராட்டத்திலும் போலீஸார் துப்பாகிச்சூட்டில் ஈடுபட்டனர்.அதில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் உயிரழந்தார்.இதன்மூலம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.
தற்போது இந்த போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டின் முன்பு லண்டன் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேலும் கொலைகார ஸ்டெர்லைட் உரிமையாளர் உள்ளே இருக்கிறார், அவரை கைது செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தும் வாசகங்களும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அடங்கிய பதாகைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.