December 22, 2020
தண்டோரா குழு
ஸ்டீல் மற்றும் மூலப் பொருட்களின் தொடர் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் முடங்கிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கிரெடாய் கோவை அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு உடனே தலையிட்டு விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்டீலுக்கான தேவை அதிகரித்து வருவதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஸ்டீல் உற்பத்தியாளர்கள் மாதந்தோறும் ஸ்டீலின் விலையை மிகவும் அதிகமாக உயர்த்தி வருகின்றனர்’’.
இது குறித்து கிரெடாய் கோயமுத்தூர் அமைப்பின் தலைவர் சுரேந்தர் விட்டல் கூறுகையில்,
“2020 வருடத்தின் துவக்கத்தில் ஒரு டன் ரூ. 40,000-ஆக இருந்த ஸ்டீல் விலை தற்பொழுது டிசம்பர் மாதத்தில் ஒரு டன்னுக்கு ரூ.58,000-ஆக உயர்ந்துள்ளது. இந்த அபரிமிதமான விலை உயர்வு ஸ்டீல் தயாரிப்பாளர்கள் தங்களுக்குள் ஒரு குழுவாக செயல்பட்டு செய்யும் ஓர் தவறான வணிக நெறியாகும்.
ஸ்டீல் விலை மட்டுமின்றி பிற கட்டுமானப் பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருவதால் வீடு கட்டும் பாமர மக்களுக்கு இது அதிக சுமையை ஏற்படுத்துகிறுத. இந்நிலை நீடித்தால், நாடெங்கும் கட்டுமானத்துறையை நம்பியிருக்கும் சுமார் 4 கோடி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் என்றார்’’.
கிரெடாய் அமைப்பு; இப்பிரச்சனையை தேசிய அளவில் எடுத்துச் சென்று மத்திய அரசுக்குக் கோரிக்கையை வைத்துள்ளது. சிமென்ட் மற்றும் ஸ்டீலின் விலை உயர்வு தேசிய அளவில் பல தலைவர்களும் அமைச்சர்களும் கண்டித்துள்ளனர்.மத்திய அமைச்சர் வி.கே. சிங் செப்டம்பர் மாதத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், தகாத விலை ஏற்றம் செய்யும் சிமென்ட கம்பெனிகளை கண்டித்தார். சிறுகுறு தொழில்கள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான அமைச்சர் நிதின் கட்கரி ஸ்டீல் மற்றும் சிமென்ட் தயாரிப்பாளர்களைக் கண்டித்து இந்த தகவலை பிரமரிடமும் எடுத்துச் சென்றுள்ளார்.
நாடெங்கிலும் கொரானா தொற்று நோயினால் ஏற்பட்டிருக்கும் பாதிக்கப்பட்டிருந்த கட்டுமானத் துறையானது மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லக்கூடிய இச் சூழலில் இந்த விலை உயர்வானது ஒரு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.