February 9, 2021
தண்டோரா குழு
கோயமுத்தூர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஸ்டீல் மற்றும் சிமென்ட் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, கட்டுமான தொழிலை காக்க வரும் 12ம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிப்பு.
இது குறித்து கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
கொரோனா நோய் தொற்று பாதிப்பு சூழலில் இருந்து மீண்டு வரும் சூழ்நிலையில் தற்போது அதிவேகமாக உயர்ந்து வரும் ஸ்டீல் மற்றும் சிமென்ட் விலை, கட்டுமான துறையில் மாபெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றன.
கட்டுமான தொழில் துறை தான் நாட்டின் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த துறை தான் இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. மத்திய, மாநில அரசுகள் அனைவருக்கும் வீடு என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்கி வருகிறது. வரலாறு காணத ஸ்டீல், சிமென்ட் விலை உயர்வால் இந்த திட்டங்களை அமல்படுத்த இயலாத ஆபத்தான நிலை ஏற்பட்டு வருகிறது.
கட்டுமான தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பல்வேறு தடவை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஸ்டீல், சிமென்ட் விலையை கட்டுபடுத்த கோரி இந்த கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நாடு முழுவதும் வரும் 12ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளோம். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கோவையில் மட்டும் கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததரார்கள் 10 ஆயிரம் பேரும், கட்டுமானம் தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேரும் இதில் பங்கேற்கின்றனர். இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் பல நூறு கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மேலும் அன்றைய தினம் கோவையில் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக ஊர்வலம் நடைபெறும்
இவ்வாறு நிர்வாகிகள் கூறினார்கள்.
இந்த நிகழ்வில் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அபிசேக், துணை தலைவர் ராம்ஜி, செயலாளர் நாராயணன், பில்டர்ஸ் அசோஷியேசன் ஆப் இண்டியா துணை தலைவர் சின்னசாமி உள்ளிட்ட 12 அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.