November 29, 2021
தண்டோரா குழு
விளையாட்டு வீரர்களுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டில், சிலம்பம் விளையாட்டை தமிழக அரசு இணைத்துள்ள நிலையில்,இதில் வேலை வாய்ப்புகளை பெறுவதில் தகுந்த கலைஞர்கள் பயனடைவதை அரசு கண்காணிக்க வேண்டும் என கோவையை சேர்ந்த கிராமிய கலைஞர் கேட்டு கொண்டுள்ளார்.
அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன பணியிடங்களில், விளையாட்டு வீரர்களுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டில், சிலம்பம் விளையாட்டை சேர்த்து, அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இது பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள போதிலும்,இந்த அறிவிப்பு சரியான பயனாளிகள் பலன் பெற வேண்டும் என கோவையில் நாட்டுப்புற கலகஞர்கள் கோரிக்கக விடுத்துள்ளனர்.
இது குறித்து கோவையில் கிராமிய கலைகளில் பல்வேறு சாதனைகளை செய்தவரும்,நாட்டுப்புற கலைகளை இளம் தலைமுறையினருக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருபவருமான கிராமிய புதல்வன் டாக்டர் கலையரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அண்மையில், தமிழக அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில், காலியாக உள்ள பணியிடங்களில், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டில்,சிலம்பம் விளையாட்டை சேர்த்துள்ளதை தாம் வரவேற்பதாக கூறிய அவர்,அதே நேரத்தில் இந்த அறிவிப்பில் உண்மையான கலைஞர்கள் பயனடையும் வகையில்,தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அவர்,சிலம்பத்தை இட ஒதுக்கீட்டில் இணைத்தது போல தமிழக பாரம்பரிய கலைகள் அனைத்தையும் இணைக்க முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இந்த சந்திப்பின் போது நாட்டுப்புற மூத்த கலைஞர் அனில்குமார் உடனிருந்தார்.