February 5, 2018
தண்டோரா குழு
வேலையில்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்பது சிறந்தது என குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமித் ஷா மாநிலங்களவையில் கூறியுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் கன்னி பேச்சில் பகோடா சர்ச்சையை அவர் குறிப்பிட்டார்.
அப்போது பேசிய அவர்,
அரசின் திட்டங்கள் குறித்து பெருமையுடன் குறிப்பிட்டார். சிறு,குறு தொழில் கடன்களை பெறுவோர் தொழில் தொடங்கி சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகின்றனர். பகோடா விற்பதை கிண்டல் செய்து காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்களை விமர்ச்சித்த அவர், வேலை இல்லாமல் இருப்பதற்கு பகோடா விற்பது சிறப்பான பணி எனவும் பக்கோடா விற்பது அவமானமில்லை. வேலையின்மை இப்போது திடீரென உருவாகவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமராகும்போது, பகோடா விற்பவரின் மகன் ஏன் தொழிலதிபராக வரக்கூடாது என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
டி.வி நிகழ்ச்சி ஒன்றில் வேலையில்லா திண்டாட்டம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி சாலையில் சிலர் பகோடா விற்பதாக கூறி விளக்கமளித்தார். இதனை கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் மோடி செல்லும் இடங்களில் பகோடா செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.