January 31, 2018
தண்டோரா குழு
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களின் 7 நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அரசு போக்குவரத்து ஊழியர்கள், ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன், நிலுவைத்தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுதும் போக்குவரத்து முடங்கியது. பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். ஒரு வாரத்திற்கு மேலாகவும் போராட்டம் நீடித்த நிலையில் உயர்நீதிமன்றம் தலையிட்டு தமிழக அரசு, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தது.
இதையடுத்து, பல கட்ட வழக்கு விசாரணைக்குப் பின் போக்குவரத்து தொழிலாளர் ஓய்வூதியம், ஊதிய உயர்வு அனைத்து பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து மணிக்குமார் அமர்வு உத்தரவிட்டது.ஊதிய வித்தியாசங்கள் குறித்தும் ஓய்வூதியம், நிலுவைத்தொகை போன்றவற்றை அவர் மூலமாக பேசி தீர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து,கடந்த ஜனவரி 11 அன்று தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்திதங்கள் 7 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தனர். எனினும், தொழிலாளர்கள் தரப்பில் 7 நாட்கள் வேலை நிறுத்தம் செய்த காலகட்டத்துக்கு சம்பளம் பிடிக்கக் கூடாது என கோரிக்கை வைத்தனர்.ஆனால் அதை அரசுத்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று தொழிலாளர்களுக்கு சம்பளம் போடப்படுகிறது. இதில் வேலை நிறுத்தம் செய்த 7 நாட்களுக்கான சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தியதற்காக ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளம் பிடிக்காவிட்டால் நாளை இதே போன்று வேலை நிறுத்தம் அடிக்கடி நிகழும் ஆகவே சம்பளம் பிடித்தம் விவகாரத்தில் விட்டுத்தர முடியாது என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதற்கடையில், சம்பளப் பிடித்தம் இருக்காது என நினைத்த தொழிலாளர் தரப்பினர் மத்தியில் தற்போது அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்ள தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.