• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தை இந்தியாவின் முன்மாதிரி நிறுவனமாக மாற்றுவோம் !

January 29, 2021 தண்டோரா குழு

“சத்குருவின் வழிகாட்டுதல்படி, அடுத்த சில ஆண்டுகளில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தை இந்தியாவின் முன்மாதிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனமாக மாற்றிக் காட்டுவோம்” என ஈஷா அவுட்ரீச் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராசா தெரிவித்தார்.

கோவை தொண்டாமுத்தூரில் செயல்பட்டு வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு ’சிறந்த உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்’ என்ற விருதை தமிழக முதல்வர் குடியரசு தின விழாவில் வழங்கி கெளரவித்தார்.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜனவரி 29) நடைபெற்றது.

இதில் அந்நிறுவனத்துக்கு Resource institute ஆக செயல்படும் ஈஷா அவுட்ரீச் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் வழங்கிய விருதினை எங்கள் விவசாயிகளுக்கு கொடுக்கும் மிகப்பெரிய ஊக்குமாக நாங்கள் கருதுகிறோம்.இந்நிறுவனத்தை கடந்த 8 வருடங்களாக ஈஷாவின் உதவியுடன் நடத்தி வருகிறோம். இதில் 1,063 விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் 70 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகளும், 38 சதவீதம் பேர் பெண் விவசாயிகளாகவும் உள்ளனர்.

இந்நிறுவனம் வந்த பிறகு தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகளின் வாழ்வில் மாற்றம் உருவாகியுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சியும் மிகப் பெரிய அளவில் உள்ளது. ஆரம்பத்தில் ரூ.45 ஆயிரம் ஆண்டு வருமானம் (Annual Turnover) ஈட்டிய இந்நிறுவனம் குறுகிய காலத்திலேயே ரூ.12 கோடி ஆண்டு வருமானம் எடுக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் இந்நிறுவனம் ஒரு தீர்வாக உள்ளது. விவசாயிகள் விளைப்பொருட்களை உற்பத்தி செய்தால் மட்டும் போதும். அதை அறுவடை செய்வதில் தொடங்கி விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவது வரை அனைத்து பணிகளையும் இந்நிறுவனமே பார்த்து கொள்கிறது.

சத்குரு அவர்கள் ஆரம்பம் முதல் இந்நிறுவனத்துக்கு வழிகாட்டி வருகிறார். அவரின் வழிகாட்டுதல் படி, அடுத்த சில ஆண்டுகளில் இந்நிறுவனத்தை இந்தியாவின் முன்மாதிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனமாக மாற்றி காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் குமார் பேசுகையில்,

“விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு சரியான, லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இந்த நிறுவனத்தை தொடங்கினோம். இந்நிறுவனத்தின் மூலம் தேங்காய், பாக்கு, காய்கறிகள் போன்றவற்றை நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இதன் மூலம் தொண்டாமுத்தூர் விவசாயிகள் சந்தித்து வந்த பல்வேறு சிரமங்கள் நீங்கி உள்ளது; வருவானம் அதிகரித்துள்ளது.

சிறிய, பெரிய விவசாயிகள் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரி விலை கிடைப்பதற்கு இந்நிறுவனம் வழிவகை செய்துள்ளது. நேரடி விற்பனை மட்டுமின்றி, விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்குவது, தண்ணீர் பற்றாகுறையை சமாளிக்க சொட்டுநீர் பாசனம் அமைப்பது, அரசின் நலத் திட்ட உதவிகளை விவசாயிகள் பெறுவதற்கு உதவி செய்வது போன்ற பல்வேறு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

முதல்கட்டமாக, நாங்கள் விளைவித்த 15 வகையான காய்கறிகளை 5 டன் அளவுக்கு கத்தார் நாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம். இதை படிப்படியாக அதிகரிக்கும் பணியிலும் ஈடுப்பட்டு வருகிறோம்.வெள்ளியங்கிரி உழவன் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு எங்கள் நிறுவனத்தில் உறுப்பினர்களாக இருக்கும் விவசாயிகள் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் பிற விவசாயிகளும் பலன் அடைந்துள்ளனர்” என்றார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக இருக்கும் விவசாயிகள் வேலுமணி, திரு.கிஷோர் குமார், சாரதாமணி, வள்ளுவன், கனகராஜ்,மயில்சாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

தமிழக அரசின் விருது வென்ற அந்நிறுவனத்துக்கு சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்

“நீடிக்கக்கூடிய வேளாண்மை, உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியாக செயலாற்றுவது பாராட்டிற்குரியது. அற்புதமாக இயங்கியமைக்கு வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், இன்றியமையாத வழிகாட்டுதலுக்கு ஈஷா அவுட்ரீச்சிற்கும் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க