February 18, 2020
தண்டோரா குழு
கோவை மேட்டுப்பாளையம் ரோடு வெள்ளக்கிணர் பிரிவில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அன்று மாலை மதுகுடிக்க வந்தவர்களில் சிலர் சப்ளை செய்யும் கடைகாரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடைகாரர்கள் மதுகுடிக்க வந்தவன் ஒருவனை அடித்து அனுப்பியுள்ளனர். அதன்பிறகு கடையில் இருந்து சென்ற அவர்கள் மீண்டும் நண்பர்களுடன் ஆட்டோவில் உருட்டு கட்டைகளை எடுத்து வந்தவர்கள் பார் டேபிள், சேர், டிவி, பிரிட்ஜ் மற்றும் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும் கடையிலுள்ள 5 சப்ளை செய்பவர்களையும் உருட்டிக்கட்டையால் அடித்துள்ளனர். இதில் மாஸ்டர் ரோகித் (28), மாஸ்டர் கோவில்பிள்ளை (55), கேசியர் ஐய்யனார் (29), சப்ளையார் தங்கசாமி (46), கிளினிங் பாய் வினோத் (22) ஆகிய 5 பேர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு வந்தவர்கள் உடனடியாக அதே ஆட்டோவில் ஏறி தப்பிவிட்டனர். இதில் ரோகித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 2 நாட்களாகியும் பேச்சு இல்லாமல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளான். இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
சி.சி.டி.வி கேமரா காட்சியில் திடீரென உருட்டு கட்டையுடன் புகுந்தவர்கள் பாரில் இருந்த சப்ளையர்கள், மாஸ்டர் என 5 பேர்களை தலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனை வைத்து டாஸ்மாக் கடையில் தகராறு செய்து அடிதடியில் ஈடுபட்ட உருமாண்டம்பாளையம் சாஸ்திரி வீதியை சேர்ந்த மதிவானன் (24), ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்வரின் மகன் ரகுபதி (21), அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பரின் மகன் கண்ணன் (21), உழைப்பாளர் வீதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் மகன் சக்திவேல் (29) ஆகிய 4 பேரை துடியலூர் சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கைது செய்தார். மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.