July 19, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட காவல்துறை பூட்டிய வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
பொதுவாக கொள்ளையர்கள் ஆள் இல்லாத வீடுகளை கண்காணித்து,வீட்டில் புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் தயக்கத்துடனும் அச்சத்துடனும் தான் செல்கின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் பூட்டிய வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் வாடகை சேவை அடிப்படையில் தற்காலிக முறையில் சிசிடிவி கேமரா,நுண்ணறிவு அலாரம் கருவிகளை பொருத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சிசிடிவி கேமராக்கள் வாடகை அடிப்படையில் வீட்டு வளாகத்தில் நிறுவப்பட்டு 4-ஜி இணைப்பு மூலம் இணையத்துடன் இணைக்கப்படும்.அந்த கேமரா காட்சிகள் வீட்டு உரிமையாளர் மற்றும் காவல்நிலைய கண்காணிப்புக்கு வழங்கப்படும். எந்த ஒரு மின் தடங்களும் இல்லாமல் நாள் ஒன்றுக்கு இதற்காக 900 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதைப்போல ஒருங்கிணைந்த சென்சார் அடிப்படையிலான நுண்ணறிவு அலாரம் வாடகை அடிப்படையில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலில் பொருத்தப்படும். திடீர் இடையூறுகள் ஏற்படும்போது எச்சரிக்கை ஒலி அடிக்கும்.
மேலும் உரிமையாளர்களின் மொபைல் எண் காவல் நிலையத்திற்கு உடனடியாக எஸ்.எம்.எஸ் என தகவல் அளிக்கப்படும்.இந்த சேவைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.450 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டங்கள் மூலம் யாரும் வீட்டில் இல்லாத போது எந்த ஒரு திருட்டு முயற்சி நடந்தாலும் அது தடுக்கப்பட்டு அவர்களின் சொத்துக்களை பாதுகாக்க உதவுவதோடு சம்பந்தப்பட்ட அனைவரின் கவனத்திற்கு உடனடியாக தெரிய வருவதால் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.