May 2, 2018
தண்டோரா குழு
வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்களுக்கு நீட் மையம் ஒதுக்கிய விவகாரத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6ம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் காளிமுத்து மைலவன் என்பவர் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.மேலும் இதனை பொது அறிவிப்பாக கருதி தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் தொடர்பான விபரத்தை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் ஒதுக்கிய நீட் தேர்வு மையத்தை தமிழகத்திலேயே ஒதுக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.