December 29, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் குடிநீர் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை புனரமைத்தல், மேம்படுத்துதல், பூங்காக்கள் அமைத்தல், பாதாள சாக்கடை அமைத்தல், குடிநீர் வழங்குதல், மாதிரி சாலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும்.
மாதிரி சாலையில் மின்சாரம், மிளிரும் விளம்பர பலகைகள் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் போன்ற அனைத்து பயன்பாடுகளும் நிலத்தடியில் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை ஓரங்களில் நவீன மின்விளக்கு வசதிகள் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாக செய்து முடித்தல் வேண்டும்.
கோவை மாநகராட்சியில் வார்டு வாரியாக குடிநீர் வழங்கும் பணிகள் சீராக நடைபெற வேண்டும். மழைக்காலங்களில் மழைநீர் சேமிப்பதற்காக வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் துணை கமிஷனர் மதுராந்தகி, மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர்கள் ஞானவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.