August 19, 2021
தண்டோரா குழு
கோவையில் வீடியோ காலில் அக்காவுக்கு தகவல் தெரிவித்து விட்டு செக்யூரிட்டி தூக்கில் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மதுக்கரை ரோடு, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் டாமல் பண்டாரி (56). நேபாள நாட்டைச் சேர்ந்தவர். 30 ஆண்டுகளுக்கு முன் கோவை வந்து தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
மது போதைக்கு அடிமையாக இருந்த டாமல் பண்டாரி அடிக்கடி தான் தற்கொலை செய்யப் போகிறேன் என உறவினர்களிடம் கூறி வந்துள்ளார்.நேற்று இரவு டாமல் பண்டாரி நேபாளத்தில் உள்ள தனது அக்கா அமிர்தம் என்பவருக்கு வீடியோ காலில் சென்று பேசினார். அப்போது அவர் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்யப்போகிறேன்.இதற்காக மின்விசிறியில் தூக்கு கயிறு மாட்டி வைத்திருக்கிறேன். நான் இறந்து போவதை நீ பார்க்க விரும்புகிறாயா என கேட்டுள்ளார். அதற்கு அவரது அக்கா, நீ தற்கொலை செய்ய வேண்டாம் எனக்கூறி தடுக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால், டாமல் பண்டாரி தூக்குக் கயிறு, நாற்காலி போன்றவற்றை வீடியோ காலில் தனது அக்காவிற்கு காட்டியுள்ளார். சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன். நீங்கள் எல்லோரும் என்னை பார்க்க வருவீர்கள். நான் தற்கொலை செய்வதை நீங்கள் வீடியோ காலில் பார்த்தால் மிகவும் கஷ்டப்படுவீர்கள். எனவே செல்போனை நான் சுவிட்ச்ஆப் செய்து விடுகிறேன் எனக்கூறி தொடர்பை துண்டித்தார். இதில் பதறிப்போன அமிர்தம், கோவையில் ஓட்டல் தொழிலாளியாக வேலை செய்து வரும் டாமல் பண்டாரியின் மகன் ராம்குமார் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். ராம்குமார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது டாமல் பண்டாரி தூக்கு போட்டு தற்கொலை செய்த விபரம் தெரியவந்தது.
இதுதொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.