• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்

January 26, 2017 தண்டோரா குழு

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக வந்த மத்தியக் குழு, பெயரளவில்தான் அமைந்திருந்ததே தவிர, கள நிலையைக் கண்டறியும் வகையில் அமையவில்லை.

வறட்சி பாதிப்பை ஈடு செய்வதற்காக மத்திய அரசிடம் ரூ. 39,565 கோடி நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருக்கிறது. தமிழக அரசின் கோரிக்கையில் உள்ள நியாயம் குறித்து அறிந்து கொள்வதற்காகவே வல்லுநர் குழுவை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

மொத்தம் 9 பேர் கொண்ட மத்தியக் குழு தமிழகத்தில் உள்ள அதிகாரிகளையும் சேர்த்துக் கொண்டு நான்கு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்திருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் ஒரு குழு ஒரு நாளைக்கு 3 முதல் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வட்டத் தலைநகரங்களுக்குச் சென்று வரவே இந்த அவகாசம் போதாது எனும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளமாகக் கூட பார்வையிட இயலாது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகளால் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் பயிர்களை மட்டுமே மத்தியக் குழு பார்வையிடுகிறது.மத்தியக் குழுவின் ஆய்வு திருப்தியளிக்கும் வகையில் இல்லை; கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை அக்குழு பார்வையிடவில்லை என்று அனைத்து மாவட்ட விவசாயிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது மழை குறித்த புள்ளி விவரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.இத்தகைய சூழலில், வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் தமிழக அரசு நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்க வேண்டும்.

வறட்சி நிவாரணமாக மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டுதான் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு இழப்பீடு வழங்குமா அல்லது சொந்த நிதியிலிருந்து வழங்குமா? ஒருவேளை மத்திய அரசு நிதி உதவி வழங்காவிட்டாலோ அல்லது பெயரளவில் மிகக் குறைந்த தொகையை இழப்பீடாக வழங்கினாலோ விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இயலாது என தமிழக அரசு கைவிரித்து விடுமா என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

மத்தியக் குழு ஆய்வை முடித்துக் கொண்டு அடுத்த வாரமே மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்தாலும் கூட, அடுத்து சில மாதங்கள் கழித்துத்தான் மிகவும் சொற்பமான தொகையைத் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும்.

மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வறட்சி நிவாரணத்தை அளவீடாகக் கொண்டால், தமிழகத்திற்கு அதிகபட்சமாக ரூ.1500 கோடி கூடக் கிடைக்காது. வறட்சி பாதிப்பை ஈடு செய்ய ரூ.39,565 கோடி தேவை என தமிழக அரசு கோரியுள்ள நிலையில், ரூ.1500 கோடி மட்டும் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு தமிழக ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்?

பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 வீதமும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ. 25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். நிபந்தனையின்றி அனைத்து உழவர்களின் பயிர்க்கடனையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன், அதிர்ச்சியாலும், தற்கொலையாலும் உயிரிழந்த 250க்கும் மேற்பட்ட உழவர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க