June 23, 2021
தண்டோரா குழு
கோவை விமான நிலைய விரிவாக்கம் கோவை மக்களின் நீண்ட கால கணவாகும். இதற்கான நிலகையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக விமானநிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தொய்வு நிலவியது. இதனிடையே விமானநிலைய விரிவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி கூறியதாவது:
மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள ரூ.26 கோடி நிதியை விரைந்து நில உரிமைதாரர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் வழங்கி, நிலத்தை கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க உள்ள நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க அரசிடம் இருந்து ரூ.1,000 கோடி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும் இந்திய ராணுவத்தின் வசம் உள்ள 134 ஏக்கர் நிலத்தை விமானநிலைய ஆணையத்திற்கு மாற்ற தடையில்லா சான்று பெற வேண்டும். விமானநிலைய விரிவாக்க பணிகளை தாமதம் இன்றி விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அலுவலர்கள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், விமானநிலைய இயக்குனர் மகாலிங்கம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.