April 14, 2021
தண்டோரா குழு
கோவையில் விபத்தில் உயிரிழந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் வெங்கடேசன் நேற்று வழங்கினார்.
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தவர் பிரகாஷ்(32).கோவை உக்கடம் சி.எம்.சி. காலனியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த இவர்,அங்கு குடியிருப்புகள் அகற்றப்பட்டு,புதிய வீடுகள் அமைக்கப்பட உள்ளதால்,கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, குடும்பத்துடன் செட்டிபாளையம் பகுதிக்கு சென்று வசித்து வந்தார்.
இந்நிலையில்,நேற்று முன் தினம் காலை பணிக்குச் செல்வதற்காக, போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது,அவ்வழியாகச் சென்ற வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.இதைத்தொடர்ந்து,நேற்று பிரகாஷின் தந்தை தன்னாசி, தாயார் செல்வி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் வெங்கடேசன், மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி ஆகியோர் உதவித்தொகையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அவர்களிடம் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தூய்மை பணியாளர் இறந்த செய்தி தேசிய துப்புரவு ஆணையத்திற்கு வந்தவுடன் மாவட்ட கலெக்டரை அணுகி உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்து இன்று (நேற்று) அவரது குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவசமான ஆயுஸ்மான் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் அனைத்து ஊழியர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்து தர பேசியுள்ளோம். பிரதமரின் 12 ரூபாய் விபத்து காப்பீடு, 330 ரூபாய் ஆயுள் காப்பீடு போன்றவையும் உள்ளது. இது தனிபட்ட நபர் செலுத்த வேண்டியது அதை அரசாங்கமே செலுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் முறையே இல்லை. மாநகராட்சி நிர்வாகமே பணியாளர்களுக்கு சம்பளம் அளித்து வருகிறது. அது போலவே அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க கோரி அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் கூறி வருகிறோம். இது போன்ற நல வாரியம் இருப்பதே அதிக மக்களுக்கு தெரியவில்லை.
இது போன்ற ஒரு வாரியம் இருப்பது மக்களுக்கு தெரிய வர வேண்டும். அப்போது பல்வேறு பிரச்சனைகளை குறைக்க முடியும். மல குழியில் இறங்க கூடாது என்ற சட்டம் இருப்பினும் பலரும் அதில் இறங்கி உயிரிழக்கின்றனர். இந்த தொழிலில் ஈடுபடுபவர்களை மீட்டு அவர்களுக்கு கடன் ஏற்பாடு செய்து வேறு வேலைக்கு செல்ல பரிந்துரை செய்து வருகிறோம். ஒப்பந்த ஊழியர்கள் அவர்களது குறைகளை புகார்கள் மூலம் தெரிவித்தால் அவர்களுக்கு உடனடியாக குறைகளை களைய நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.