August 31, 2021
தண்டோரா குழு
விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்கின்ற இந்து விரோத போக்கை கண்டித்து வருகின்றன 2 ஆம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் மக்கள் இறைவனிடம் முறையிட போவதாக காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை ராம் நகர் பகுதியில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்ற விநாயகர் சதுர்த்தி மக்கள் விழாவை தமிழக அரசு தடை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கொரோனா காரணம் என்று அரசு கூறியிருப்பது திட்டமிட்ட சதி.கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது கூட இந்து முன்னணி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து சிறப்பான முறையிலே மக்களுடன் கொண்டாடியது.
அதன் காரணமாக எவ்வித தொற்றுப் பரவலும் உண்டாகவில்லை.விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்கின்ற இந்து விரோத போக்கை கண்டித்து வருகின்றன 2ஆம் தேதி வியாழக்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் மக்கள் இறைவனிடம் முறையிட்டு வேண்டுதல் செலுத்துவார்கள். இந்த அரசு உடனடியாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொண்டு சமூக இடைவெளியுடன் மக்கள் விழாவைக் கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்,இல்லையென்றால் மிக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது உடன் மாநில செயலாளர் J.S.கிஷோர் குமார், கோவை கோட்ட செயலாளர் S.சதீஷ், மாவட்ட தலைவர் K.தசரதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.