February 7, 2020
தண்டோரா குழு
நெய்வேலியில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஐந்தாம் தேதி காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடைபெறுகிறது. இதற்கிடையில், நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்த விஜய் நேற்று முன் தினம் வருமான வரித்துறையினர் அழைத்து வந்து அவரின் வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விஜயின் இல்லத்தில் 23 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் விஜய் வீட்டிலிருந்து எந்த ரொக்கமும் வருமான வரித்துறையினருக்கு கிடைக்கவில்லை, இது ஒரு சாதாரண விசாரணை என்றும் வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து,வருமான வரிச்சோதனை முடிவடைந்த பிறகு நெய்வேலியில் நடைபெறும் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இன்று விஜய் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில்,NLCயில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலியில் நடிகர் விஜய்க்கு எதிராக 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாதுகாக்கப்பட்ட இடமான என்எல்சி நிலக்கரி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது என பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். நெய்வேலி 2வது சுரங்கத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்துவதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.