March 20, 2018
தண்டோரா குழு
விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை, கேரளாவில் இருந்து தமிழகத்தின் நெல்லை மாவட்ட எல்லையான கோட்டை வாசல் பகுதிக்கு ராமராஜ்ய ரத யாத்திரை வந்தது.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது. இந்த ரத யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து கேரள மாநிலத்திலிருந்து நெல்லை மாவட்டம் வழியாக தமிழகம் வந்தடைந்தது. இதற்கிடையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 144 தடை உத்தரவையும் மீறி செங்கோட்டையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது.
தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த யாத்திரை நடத்தப்படுவதாக, கூறி திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், நாம் தமிழர், ம.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து, ரதயாத்திரையை எதிர்த்து போராட்டத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து கைது செய்யப்பட்டார். இதேபோல, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக தென்காசியில் முகாமிட்டிருந்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பெரியார் திராவிடர் கழக நிறுவனர் ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெல்லை மாவட்டத்தில் வரும் 23ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் காலை 9.30 மணிக்கு புளியரை சோதனை சாவடி வழியாக விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைந்தது.