June 8, 2021
தண்டோரா குழு
வால்பாறையில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து அருகில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியின் சுற்று சுவரை இடித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர் பாடி பாரளை எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு புகுந்த 3 காட்டு யானைகள் ஜான் டேவிட், இந்திரா, பழனியம்மாள் ஆகியோரது வீட்டின் கதவு ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
காட்டு யானைகள் வீட்டின் ஜன்னல் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்த தொழிலாளர்கள் காட்டு யானைகளை சத்தம்போட்டு நீண்ட போராட்டத்திற்கு பின் விரட்டியுள்ளனர்.அப்போது அருகில் உள்ள ஆரம்ப பள்ளி வளாகத்திற்குள் சென்ற யானைகள் அங்கு உள்ள சத்துணவு கூடத்தின் ஜன்னலை உடைத்து பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி சேதப்படுத்தியுள்ளது.
காட்டு யானைகளை அப்பகுதியில் உள்ளவர்கள் வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர். ஆனால் யானைகள் வனப் பகுதிகள் செல்லாமல் அப்பகுதியில் முகாமிட்டு இருந்ததால் பொது மக்கள் பயந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.