March 31, 2021
தண்டோரா குழு
பாஜகவினர் பேரணியில் கல் வீசி இஸ்லாமியர்கள் கடைகளை தாக்கியதை கண்டித்து வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னதாக புலியகுளத்தில் இருந்து பாஜக வினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக தேர்நிலைக்கு திடலுக்கு வந்தனர்.அப்போது பெரிய கடை வீதி சிக்னல் அருகே வரும் போது பாஜகவினர் முஸ்லிம் இளைஞர்களை பார்த்து கோசம் எழுப்பியுள்ளனர். பதிலுக்கு அவர்களும் கோசம் எழுப்பியதால் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து தள்ளு முள்ளு ஏற்பட்டு பாஜகவினர் இஸ்லாமியர்கள் கடை மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையான அனுமதி வாங்காமல் பேரணி நடத்தியது தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்ய இருக்கின்றனர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய பாஜகவினர் மற்றும் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி நாகராஜனிடம் புகார் அளித்தனர்.