June 11, 2021
தண்டோரா குழு
பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குறித்து முகநூலில் அவதூறாக எழுதுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி
பா.ஜ.க மகளிரணியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மோகனாம்பாள் அளித்துள்ள மனுவில்,
முகநூலில் கோவையைச் சேர்ந்த கோவை ரவிசங்கர் என்பவர் தன் பக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணித்தலைவியாக உள்ள வானதி ஸ்ரீனிவாசன் குறித்து சில தரக்குறைவான விமர்சனங்களைப் பதிவிட்டிருந்தார்.வானதி ஸ்ரீனிவாசனின் வளர்ச்சியில் காழ்ப்புணர்ச்சி கொண்ட எஸ் ஜெகநாதன் என்பவரும் பலருக்கு பகிர்ந்துள்ளார்.சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் பகிர்வதையும் சட்டப்பிடியிலிருந்து தப்பிக்க சிலவற்றை பின் நீக்கி விடுவதையும் தொடர் வழக்கமாகக் கொண்டவர்.
வானதிஸ்ரீனிவாசன் வழக்கறிஞர் திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்தவர். தற்போது கோவை தெற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கோவை மக்கள் சேவை மையத்தின் நிறுவனராக பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து மக்களின் மதிப்பைப் பெற்றுள்ளார். உயர் கட்சி மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் மக்கள் நலப் பணிகள் குறித்து மக்கள் குறித்து மக்கள் அறியச் செய்யும் விதமாக சமூக வலைத் தளங்களில் பதிவுகள் போடுகையில்,தனி மனிதத் தாக்குதல் மற்றும் தரக்குறைவாகவும் ஒழுக்க கேடான வார்த்தைகள் பதிலாகப் போடுவதை தொடர்கின்றனர்.
இதே போல் கோவையைச் சேர்ந்த கீதா என்பவர் தன் கீதா டிவி என்ற சொந்த யூடியூப் சேனலில் கடந்த பல மாதங்களாக பா ஐக மீதும் குறிப்பாக வானதி ஸ்ரீனிவாசன் மீதும் பெரிய உத்தமி மாதிரி ” என்றும் ஊழல் வாதி என்றும் பல தரக்குறைவான வார்தைகளைப் பேசி வருகிறார். இப்பதிவுகளைப் பார்க்கும் பலரும் பெரும் மன அதிர்ச்சி வேதனை அடைகின்றனர். பெண்கள் பொது வாழ்வுக்கு வருவதே அரிது எத்தனையோ இன்னல் தாண்டி நிலையில் உள்ள வானதி போன்றோர் மீதே கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் ஒழுக்கக்கேடான விமர்சனங்களைச் செய்து வருவதைப் பார்க்கும் பலருக்கு ஒருவர் குறித்து உண்மை தெரியாமல் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.
மேலும் பெண்கள் இது போன்ற விமர்சனங்களுக்கு அஞ்சி பொது வாழ்வுக்கு வரவும் பயப்படுகின்றனர் இந்த சூழலில் , தாங்கள் மேற்கண்ட பதிவுகளை ஆய்வு செய்து கீதா,ரவிசங்கர்,ஜெகநாதன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.மேலும் மேற்கொண்டோரின் பதிவுகளை நீக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
எனக் கூறியுள்ளார்.