June 11, 2018
தண்டோரா குழு
பி.எஸ்.என்.எல் பெண் ஊழியரின் மெசேஜிற்கு பதிலளிக்கும் வகையில் சிரிப்பு எமோஜி அனுப்பிய 46 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தூத்துக்குடி மண்டல பொறியாளராக பணியாற்றி வருபவர் விஜயலட்சுமி. இவர் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்கள் இருக்கும் வாட்ஸ-அப் குரூப்பில் பி.எஸ்.என்.எல் நிறுவன நெட்வொர்க் கவரேஜ் தொடர்பான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளர்.
இந்நிலையில் அந்த குரூப்பில் இருப்பவர்கள் நிறுவனத்தை கலாய்க்கும் வகையில் அழுகையுடன் கூடிய சிரிப்பை கொண்ட எமோஜியை பதிவிட்டனர். இதனை விஜயலட்சுமி அவமானமாகவும் குற்றவுணர்ச்சியாகவும் கருதியுள்ளார்.
இதையடுத்து, விஜயலட்சுமி பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு தகவல் தொழில்நுட்பம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரித்த தூத்துக்குடி தெற்கு காவல் ஆய்வாளர் வழக்குபதிவு செய்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 46 ஊழியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.பின்னர் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் அழுகையுடன் கூடிய சிரிப்பை கொண்ட எமோஜி பதிவிட்டது ஒருவரின் உணர்வை வெளிப்படுத்தும் செயல் உணர்வை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால் அதேசமயம் ஒரு பெண் ஊழியர் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து எழுத்துப்பூர்வ வாக்குமூலம் அளிக்க வலியுறுத்தினார். அனைவரும் தங்கள் செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்களும் அறிக்கை தாக்கல் அளித்தனர். இதனையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.