January 9, 2021
தண்டோரா குழு
கோவை வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கு சிறப்பு சரக்கு ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது
வடகோவையில் இருந்து புதுடெல்லி படேல் நகருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள், உணவுப் பொருள்கள், துணி வகைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கு வாராந்திர சிறப்பு சரக்கு ரயில் நேற்று முதல் இயக்கப்பட்டது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சீனிவாசன் இந்த ரயிலைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், சேலம் கோட்ட கூடுதல் மேலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ரயில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு செல்லும். திங்கள்கிழமை காலை 5 மணிக்கு ராஜ்கோட்டைச் சென்றடையும். செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ராஜ்கோட்டில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு சரக்கு ரயில், வியாழக்கிழமை இரவு 8.35 மணிக்கு வடகோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலில் மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள், துணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லப்பட உள்ளன.