July 5, 2018
தண்டோரா குழு
லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. லண்டன் நீதிமன்றத்தில் பணமோசடி தொடர்பாக விசாரணையையும் தொடர்ந்து நடைபெற்றது.
இதற்கிடையில், வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இந்த உத்தரவின்படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து நீதிமன்றத்தின் வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையில், பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லண்டன் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, விசாரணை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான இடங்களுக்கு செல்ல முடியும், சோதனையிட முடியும். லண்டன் நீதிமன்றத்தின் அமலாக்க அதிகாரி, அவரது அதிகாரத்தின் கீழ் செயல்படும் எந்த அமலாக்க முகவர்களும் இந்நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.