March 9, 2018
தண்டோரா குழு
கோவையில் லஞ்சப்புகாரில் கைதான பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் நிபந்தனை ஜாமினில் விடுதலையாகினர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நிரந்தரத்திற்காக ரூ.30 லட்சம் லஞ்ச கேட்டதாக சுரேஷ் என்பவர் அளித்த புகாரில் கடந்த மாதம் 3ஆம் தேதி துணைவேந்தர் கணபதி, வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் ஆகிய இருவரும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் 2 முறை நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் 3 ஆம் முறையாக ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து, இந்த வழக்கில் கைதான மற்றொருவரான வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து இருவரும் சிறையிலிருந்து வெளியே வந்தனர். விசாரணை அதிகாரி முன்பாக இருவேளையும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது.