July 22, 2021
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை துறைக்கு ரூ. 19 லட்சம் மதிப்பிலான வெண்டிலேட்டர்களை ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சங்கத்தின் சார்பாக இன்று வழங்கப்பட்டது.
ரோட்டரி சங்கத்தின் தலைவர் என். சுப்ரமணியம் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ் சமீரன் அவர்கள் முன்னிலையில் அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் ஏ. நிர்மலாவிடம் வழங்கினார். ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சங்கத்தின் டாக்டர் ஆர்.வி. ரமணி, ரோட்டரி கவர்னர் எஸ். ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
கனடாவைச் சேர்ந்த வெஸ்ட் கேர் மெடிக்கல் நிறுவனம் இந்த கருவிகளை வழங்க முன்வந்தது. அதனை கனடாவைச் சேர்ந்த சுரேஷ் ஐயர் மற்றும் ரோட்டரி கோயமுத்தூர் சென்டரல் இணைந்து பணியாற்றி அரசு மருத்துவனைக்கு வழங்கி உதவினர்.
ரோட்டரி சங்கத் தலைவர் என். சுப்ரமணியம் பேசுகையில்,
இந்த பெருந்தொற்றுக் காலத்தில் சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு ரோட்டரி சங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த முயற்சியின் கீழ் இன்று இந்த வெண்ட்டிலேட்டர்களை வழங்கியுள்ளது. மிகச் சிறய அளவில் உள்ள இந்த அதிநவீன வெண்டிலேட்டர்களை அறுவை சிகிச்சை தியேட்டர்களிலிருந்து வார்டுக்கும் வார்டிலிருந்து அறுவை சிகிச்சை தியேட்டருக்கும் மிகவும் எளிதாக எடுத்துச் செல்லலாம் என்றார்.
ரோட்டரி கவர்னர் எஸ். ராஜசேகர் அவர்கள் பேசுகையில்,
அரசு மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள ரோட்டரி சங்கங்கள் பல்வேறு கருவிகளையும் உபகரணங்களையும் கொடுத்து உதவி வருகின்றன என்றார்.
அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் ஏ. நிர்மலா ரோட்டரி சங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.