January 15, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் ரேஸ் கோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பொதுமக்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்ல வசதி உள்ளது. இங்கு அதிகாலை முதல் இரவு வரை பொதுமக்கள் நடைபயிற்சி செல்வது வழக்கம். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த காலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது யாரும் நடைபயிற்சி செய்யவில்லை. அதன் பின் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அங்கு தினமும் பலர் நடைபயிற்சி மேற்கொள்வதுடன், உடற்பயிற்சியும் செய்து வருகிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிவது இல்லை. அத்துடன் சமூக இடைவெளியும் கடைபிடிப்பது இல்லை.
இந்நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் ரேஸ் கோர்ஸ் உள்ளிட்ட அனைத்து இடங்களில் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு இன்று முதல் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.