February 12, 2018
தண்டோரா குழு
நாட்டிற்காக ஆர் எஸ் எஸ் அமைப்பு மூன்று நாளில் ராணுவத்தை தயார் செய்யும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆறு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து பேசினார்.
அப்போது பேசிய அவர், நாடும், அரசியல்அமைப்பும் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் எங்கள் திறமை நாடு கடந்த நிலைக்கு முகம் கொடுக்கும். ‘‘ராஷ்டிரீட ஸ்வயம் சேவக் சங்கமானது மூன்றே நாட்களில் ராணுவ வீரர்களை உருவாக்கும் திறன் கொண்டது. ராணுவம் 6 முதல் 7 மாத பயிற்சியில் செய்வதை சங்கம் மூன்றே நாட்களில் செய்துவிடும். அதுவே எங்களது திறமை. நாட்டுக்கு அப்படி ஓர் இக்கட்டான சூழல் ஏற்பட்டால், அரசியல் சாசனம் அனுமதித்தால் நாங்கள் நிச்சயமாக இதை செய்து முடிப்போம். ஆர்எஸ்எஸ் ராணுவமோ அல்லது துணை ராணுவமோ அல்ல ஆனால், ராணுவத்துக்கு நிகரான ஒழுக்க நெறிகள் இங்கே பின்பற்றப்படுகிறது’ எனக்கூறினார்.
இதையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் விதத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியதாக பல்வேறு கட்சித் தலைவர்களும் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், , இதுபற்றி அந்த அமைப்பின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் மோகன் வைத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
‘‘ராணுவத்தையும், ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிட்டு மோகன் பகவத் பேசவில்லை. ராணுவத்தை அவமதிக்கும் வகையிலும் பேசிவில்லை. சமூகத்தையும், ஆர்எஸ்எஸ்ஸையும்தான் ஒப்பிட்டு பேசினார். போர் போன்ற சூழல் ஏற்பட்டால் சமூகத்தை தயார் படுத்த ராணுவத்திற்கு ஆறு மாதங்கள் வரை ஆகும். ஆனால், ஆர்எஸ்எஸ் அதை மூன்று நாட்களில் செய்து முடிக்கும் என்றுதான் கூறினார். ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் ஒழக்க நெறியை குறிப்பிடுவதற்காக அவ்வாறு பேசினார்’’ என விளக்கம் அளித்துள்ளார்.