June 9, 2018
தண்டோரா குழு
உத்தரகாண்ட் மாநிலத்தின் அரசு பலூன்கள் உதவியுடன் வைஃபை ஹாட் ஸ்பாட் மூலம் இன்டர்நெட் வசதியை கிராமங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
மலைகள் நிறைந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், 680 கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி கிடைக்காத நிலை உள்ளது. இதைப் போக்க, வைஃபை மற்றும் போன் கால் வசதி அளிக்கும் சாதனங்கள் கொண்ட ராட்சத பலூன்களை நிலைநிறுத்த உத்தரகாண்ட் அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக முதற்கட்டமாக சோதனை முறையில் டேராடூனில் உள்ள ஐடி பூங்காவில் ஏரோஸ்டாட்ஸ் பலூன் வெள்ளிக்கிழமை பறக்க விடப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வில் அம்மாநில முதல்வர் திரவேந்திர சிங் ராவத் கலந்துகொண்டார். ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட, 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த பலூன் மூலம், ஏழரை கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இன்டர்நெட் வசதி கிடைக்கும். ஒரு பலூன் மூலம் வைஃபை வசதி அளிக்க 50 லட்சம் செலவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 நாட்கள் பறக்கும் இந்த ஏரோஸ்டாட்ஸ் பலூனில் உள்ள டிரான்சீவர் ஆண்டெனா (transceiver antenna) மூலம் போன்கால் வசதியும் வைஃபை மோடம் (Wi-Fi modem) மூலம் இன்டர்நெட் வசதியும் பெறலாம். மேலும் இந்த பலூனில் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.