June 8, 2018
தண்டோரா குழு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மகாராஸ்டிரா போலீசார் தெரிவித்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பீமா-கோரேகானில்கடந்த ஜனவரி 1-ந் தேதி கோரேகான் யுத்த வெற்றியின் 200-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது.அப்போது பெரும் வன்முறை வெடித்தது.இந்த வன்முறை தொடர்பாக பேராசிரியர் சோமா சென் உட்பட 5 பேரை புனே போலீசார் கைது செய்தனர்.
அவர்களில் ரேனா ஜேக்கப் என்பரும் ஒருவர்.அவரிடம் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
இதற்கிடையில்,இந்த 5 பேரையும் காவலில் எடுக்க புனே நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.அம்மனு மீதான விசாரணையின் போது கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளது.கைது செய்யப்பட்ட நபர்களின் இ-மெயிலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பாணியில் பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.ஆகையால் இது தொடர்பாக விசாரிக்க 5 பேரையும் போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டும் என வாதிடப்பட்டது.இந்நிலையில்,புனே போலீசாரின் இந்த திடுக்கிடும் தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கடிதத்தில்,
“தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.அதேசமயம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மேற்குவங்கம்,திரிபுரா என பல மாநிலங்களில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கட்சி அமைப்புகளை விரிவுப்படுத்தி வருகிறது.இதேநிலை தொடர்ந்தால் நமது அமைப்புக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும்.ஏற்கெனவே நமது அமைப்புகளின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.எனவே மோடிக்கு முடிவு கட்ட வேண்டும்.ஆகையால் ராஜீவ் காந்தி மாதிரி சம்பவத்திற்கு திட்டமிடுகிறோம்.தற்கொலைப்படை தாக்குதலுக்கான நேரத்திற்காக காத்திருக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்தகடிதம் மத்திய உளவுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்கவும்,பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளும்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.