July 21, 2018
தண்டோரா குழு
ஒற்றைக்கண் அசைவில் புகழ் பெற்ற நடிகை பிரியா வாரியர்,கண்ணடிப்போர் சங்கத்துக்கு புதிய உறுப்பினராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்றுள்ளார்.
நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் படத்தில் வரும் பாடல் ஒன்றில் புருவத்தை உயர்த்திக் கண்ணடித்து பலரையும் கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஒரே நாளில் பெரும் புகழ் பெற்றார்.
இதற்கிடையில்,பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது உரையை முடித்த பின் யாரும் எதிர்பாராத வகையில்,தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று பிரதமர் மோடிக்கு கைகொடுத்து பின் கட்டியணைத்தார்.
பின்னர் தனது இருக்கைக்கு திரும்பி வந்த ராகுல்காந்தி,சக கட்சி உறுப்பினரைப் பார்த்து சிரித்தபடி கண்ணடித்தார்.அவரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.இதையடுத்து சிலர் ராகுல் காந்தியின் இந்த காட்சியையும் பிரியா வாரியரின் கண்ணசவையும் ஒப்பிட்டு மீம்ஸ் கிரியேட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை பிரியா வாரியர்,தாம் கல்லூரி முடிந்து வந்ததும்,ராகுல் கண்ணடித்த நிகழ்வை தொலைக்காட்சியில் கண்டதாகவும்,அவரை கண் அடிப்போர் சங்கத்திற்கு வரவேற்பதாகவும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.