March 10, 2018
தண்டோரா குழு
முன்பதிவு செய்த ரயில் டிக்கட்டை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,
தலைமை முன்பதிவு கண்காணிப்பாளர்களுக்கு பெயரை மாற்றித் தரும் அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகளும் நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியராக இருந்தால் பணியின் காரணமாக செல்லும் போது, 24 மணி நேரம் முன்பாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெயரை மாற்றிக் கொள்ளலாம்.
அதைப்போல் பயணிகளும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாக தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தனது பெயரில் பதிவு செய்த ரயில் டிக்கட்டை மாற்றிக் கொள்ள கோரிக்கை விடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் பெயரில் பள்ளி, கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட டிக்கட்டுகளையும் வேறு மாணவர்கள் பெயரில் 48 மணி நேரம் முன்பாக மாற்றிக் கொள்ளலாம். கல்யாண கோஷ்டியினருக்கும், தேசிய மாணவர் படையினருக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது.