January 29, 2021
தண்டோரா குழு
இந்தியாவின் 72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, யுபிஎல் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ரஜினிகாந்த் தேவிதாஸ்பாய் ஷ்ராஃப்-க்கு, இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை அரசு வழங்கி அவரை கவுரவித்துள்ளது.
யுபிஎல் லிமிடெட் நிறுவனம், நீடித்த நிலையான விவசாய பொருட்கள் மற்றும் தீர்வுகளை வழங்கி வரும் நிலையில் வர்த்தக மற்றும் தொழில் துறையில் இந்த நிறுவனத்தின் நிறுவனர் ரஜினிகாந்த் தேவிதாஸ்பாய் ஷ்ராஃப் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 119 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் பத்ம பூஷண் விருது பெற்ற ஒரே தொழிலதிபர் ஷிராஃப் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானியாக இருந்து தொழில்முனைவோராக மாறி அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க பாடுபடும் யுபிஎல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான ஷ்ராஃப் இது குறித்துக் கூறுகையில்,
நான் எப்போதுமே மனதளவில் ஒரு வலுவான தேசியவாதியாக இருந்து வருகிறேன். இந்த மாபெரும் தேசத்தின் வளர்ச்சியில் நானும் ஒரு பகுதியாக இருந்து பங்கெடுத்து வருகிறேன். இந்த வாய்ப்புகளுக்கும் நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத் துறைக்கும் நான் எப்போதும் நன்றியுடன் இருந்து வருகிறேன். இதுபோன்ற மதிப்புமிக்க விருது வழங்கப்படுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான மற்றும் நெகிழ்வான அனுபவமாகும். இது போன்ற விருதுகள் யுபிஎல் லிமிடெட் குழுமத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. என்றார்.
அவர் மேலும் கூறுகையில், நான் இந்தத் தொழில்துறையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றத் தொடங்கினேன், இது எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க அனுபவமாக இருந்து வருகிறது. இந்த 50 ஆண்டுகளில் நிறுவனம் செய்துள்ள சாதனைகளைக் கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். யுபிஎல் லிமிடெட் நிறுவனம் அடையும் ஒவ்வொரு மைல் கல் சாதனையும் இந்த நிறுவனத்தின் 14 ஆயிரம் ஊழியர்களில் ஒவ்வொருவரது வெற்றி மகுடத்திலும் மேலும் ஒரு வைரமாகவே அமைகிறது. தற்போது இந்த விருதை வழங்கி இந்த மாபெரும் கவுரவத்தை எனக்கு வழங்கியதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். மேலும் என்னுடன் விருது பெற்ற மற்றவர்களை வாழ்த்துகிறேன். அத்துடன், எங்களுடன் பணியாற்றும் விவசாயிகளுக்கும் அவர்கள் இந்த வெற்றிகளுக்காக அளித்த பங்களிப்புகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்றார்.