July 14, 2018 
தண்டோரா குழு
                                பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு,உயர்கல்வி ஆணையம் அமைப்பது தொடர்பான வரைவு மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து,பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். 
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,
பல்கலைக்கழக மானியக் குழு,ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிதி சார்ந்த அதிகாரங்களுடன் நன்றாக இயங்கி வருவதால்,அதைக் கலைத்துவிட்டு,அதற்குப் பதிலாக ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை மட்டுமே கொண்ட இந்திய உயர்கல்வி ஆணையத்தை ஏற்படுத்த வேண்டியதில்லை.தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.தற்போதைய யுஜிசி அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.பல்வேறு திறன்களை மேம்படுத்திடும் யுஜிசி,நிதி ஒதுக்கீடு செய்தும் வருகிறது.கடந்த 1956ஆம் ஆண்டு முதல் நேர்மையாக செய்லபட்டு வருகிறது யுஜிசி.அதிகாரம் மாற்றப்பட்டால் 100% நிதியுதவி குறைந்திடும் வாய்ப்பு ஏற்படலாம்.மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீடு 60:40 என குறையும் நிலை ஏற்படலாம். 
மேலும்,மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் தமிழகத்திற்கு தகுதி அடிப்படையில் நிதி ஒதுக்குவது அவ்வளவு சாதகமாக இல்லை என்ற அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது,உயர் கல்வி ஆணைய மசோதா குறித்து தமிழக அரசுக்கு வலுவான கவலைகள் எழுந்துள்ளன.இது போன்ற காரணங்களால்,பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையம் தொடர்பான வரைவு மசோதாவை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதாகவும்,தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழு என்ற நிறுவனமே தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.