July 21, 2018
தண்டோரா குழு
மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதையடுத்து காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது,மத்திய அரசின் மீதும்,பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.பின்னர்,தனது பேச்சை முடித்து கொண்ட அவர் பிரதமர் மோடி இருக்கும் இடத்திற்கு சென்று அவரைக் கட்டித் தழுவினார்.மோடியும் சிரித்தபடியே அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.இச்செயலை சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் புன்னகையுடன் பார்த்து ரசித்தனர்.தொடர்ந்து தனது இருக்கையில் அமர்ந்திருந்த பேசிக் கொண்டிருந்த போது ராகுல்காந்தி கண் அடித்தார்.ராகுல் காந்தியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக டிரண்டிங் ஆனாது.இந்நிலையில்,ராகுல் காந்தி மோடியை கட்டித்தழுவியது குறித்து பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“ராகுல் காந்தி தன்னை கட்டிப்பிடிப்பதற்கு பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது.ரஷ்யர்களும், கொரியர்களும் மற்றவர்கள் மீது விஷ ஊசிகளை செலுத்துவதற்கு இந்த முறையை கடைபிடிப்பார்கள்.அதனால் பிரதமர் மோடி வெகுவிரைவாக மருத்துவமனை சென்று சுனந்தா புஷ்கர் கையில் இருந்தது போல் தம் மீது ஏதாவது விஷ ஊசி செலுத்துப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.