April 13, 2018
தண்டோரா குழு
பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில்,பிரதமர் மோடியிடம் அடுக்கடுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இது போலவே,உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கரும், அவரது சகோதரர் அனில் சிங்கும் தன்னை பலாத்காரம் செய்ததாக 17 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து அனில் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று நள்ளிரவு டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.அவருடன் பிரியங்கா, ராபர்ட் வாத்ரா,மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில்,ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் டுவிட்டரில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“திரு பிரதமர் மோடி உங்கள் மவுனம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ன செய்ய போகிறீர்கள்?பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை உங்கள் மாநில அரசுகள் ஏன் பாதுகாக்கின்றன.உங்கள் பதிலுக்காக இந்தியா காத்திருக்கிறது”எனக் கூறியுள்ளார்.அதனுடன் #SpeakUpஎன்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.