October 5, 2018
தண்டோரா குழு
மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், அங்குள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில், 20.5 செ.மீ., மழை பதிவாகும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்,
மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், அங்குள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான இடங்களில் வசிப்போரை மேடான இடங்களில் தங்க வைக்கவும், டெங்கு பரவாமல் தடுக்க, தேங்கும் மழை நீரை உடனே அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏடிஎஸ் கொசு இல்லாத இடமாக மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை பராமரிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுரங்க பாதைகளில் நீர் புகுந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். சாலையில் விழும் மரங்களை அகற்றும் வகையில், இரவு பணிக்கு ஒவ்வொரு குழுவும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாநில மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மீட்பு, நிவாரண பணிகளை துரிதப்படுத்த 662 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்காக மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் 1,275 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வக்கப்படும் மக்களுக்கு போதிய தண்ணீர்,சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான பால்பவுடர், மருந்துகள்,சுகாதார வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீனவர்கள் கரைக்கு திரும்பிவிட்டார்களா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்
இவ்வாறு கூறியுள்ளார்.