July 3, 2018
தண்டோரா குழு
உக்கடம் – ஆத்துபாலம் இடையே பேருந்துக்கள்,மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் ஒரு வழிப்பாதையாக மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
உக்கடம் – ஆத்துபாலம் இடையே மேம்பால பணிகள் நடைபெறுவதால் அரசு,தனியார் மற்றும் கல்லூரி பேருந்துகள் அவ்வழியாக செல்ல மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.ஆத்துபாலத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வர மாற்று பாதையை பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.
மேலும் உக்கடம்- ஆத்துபாலம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனிடையே கடந்த ஜூன் மாதம் முதல் கனரக வாகனங்கள்,ஈச்சர் லாரிகள்,டிப்பர் லாரிகள் போன்றவை இவ்வழியை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பேருந்துகள்,கார்கள்,இருசக்கர வாகனங்கள் போன்றவை செல்லமட்டும் அனுமதி வழங்கியிருந்த நிலையில் மேம்பால பணிகள் காரணமாக பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டன.இதனை தடுக்கும் விதமாக கடந்த சில நாட்களாக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஒரு வழிப்பாதையாக உக்கடம் முதல் ஆத்துபாலம் வரை செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் சோதனை ஒட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் உக்கடம் பேருந்து நிலையம் வரும் அனைத்து பேருந்துகளும் ஆத்துப்பாலத்திலிருந்து சுண்ணாம்பு கால்வாய்,புட்டு விக்கி லேக் சாலை,சேத்துமா வாய்கால்,செல்வபுரம்,மீன் மார்க்கெட் வழியாக உக்கடம் பேருந்து நிலையம் வர வேண்டும்.அதே சமயம் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்துபாலம் செல்ல எந்த தடையும் இல்லை.உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சி,பழனி,உடுமலைபேட்டை, கேரளா மாநிலம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.