December 22, 2021
தண்டோரா குழு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மேட்டுப்பாளையத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வட்டார அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி காரமடை, பெ.நா.பாளையம் வட்டார இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மேட்டுப்பாளையம் , சிறுமுகை சாலையிலுள்ள நஞ்சையா பாலிடெக்னிக் கல்லூரியில் டிசம்பர் 23 ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதில் ஐடி, இன்டஸ்ட்ரிஸ், ஆட்டோ மொபைல், கார்மென்ட்ஸ், கட்டுமானம், விற்பனைத் துறை உள்பட பல்வேறு தனியார் துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆள்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே 8 ஆவது முதல் முதுகலைப் படிப்பு பயின்றவர்கள் வரை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
தனியார் வேலை வாய்ப்பு முகாம் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். இளைஞர்கள் தங்கள் கல்வி சான்றிதழ், ஆதார் உள்பட ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.