June 25, 2021
தண்டோரா குழு
கொரோனா காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் சிறு,குறு நிறுவனங்கள் தங்களது பாதிப்பை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கோவையில் உள்ள கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை (கோவை கிளை), தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழில் அமைப்புகள் போல், நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய 170 அமைப்புகளைக் கொண்ட அனைத்திந்திய கவுன்சில் துவங்கப்பட்டுள்ளது.
இந்த சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அனைத்திந்திய கவுன்சில் சார்பில் மூலப்பொருட்கள் விலை உயர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சிறுகுறு நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக உள்ளன. நாட்டின் மொத்த ஜி.டி.பி.யில் 30 சதவீதமும், ஏற்றுமதியில் 48 சதவீதமும், 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது. இச்சூழலில் அனைத்து உற்பத்தி்க்குமான மூலப்பொருட்களின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மூலப்பொருட்களை வாங்கும் திறன் தொழில் நிறுவனங்களிடம் குறைந்துள்ளது.
அதன் மூலமாக உற்பத்தியின் அளவு குறைவதுடன் நேரடியாக இது தொழிலாளர்கள் வேலை இழப்புக்கும் வழிவகுப்பதாக அமைந்துள்ளது. உதாரணமாக கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கிலோ ரூ.45-ஆக இருந்து மைல்டு ஸ்டீல் பிளேட் விலை தற்போது ரூ.82-ஆக அதிகரித்துள்ளது. அலுமினியம் அலாய் விலை ரூ.106-லிருந்து தற்போது ரூ.206-ஆக அதிகரித்துள்ளது.
காப்பர் விலை ரூ.355-லிருந்து தற்போது ரூ.745-ஆக அதிகரித்துள்ளது. க்ராஃப்ட் பேப்பர் (பேக்கிங் கிரேடு) ரூ.20-லிருந்து தற்போது ரூ.36-ஆக அதிகரித்துள்ளது. மூலப்பொருட்களின் இத்தகைய கடுமையான விலை உயர்வால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதற்கேற்ற விலையில் ஆர்டர்களை எடுத்து தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளன. ஆர்டர்களை அளிக்கும் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு உரிய நேரத்துக்குள், உரிய விலையில் அளிக்க முடியாததால் கருப்பு பட்டியலில் இடம்பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.
இதுபோன்ற நிலையால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அழிவை நோக்கி நகரும் சூழலில் மூலப்பொருட்களை விற்பனை செய்யும் பெருநிறுவனங்கள் பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வருகின்றன. எனவே மத்திய அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஆர்டர்களை மூலப்பொருட்கள் விலை உயர்வால் ரத்து செய்யும்போது, அபராதம் விதிப்பது அல்லது கருப்பு பட்டியலில் தொழில் நிறுவனத்தின் பெயரை சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும், தற்போதுள்ள விலை உயர்வை கருத்தில் கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும்.
செயில், விசாக் ஸ்டீல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சிறு,குறு மற்றும் நடுத்த நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், முன்னுரிமை அடிப்படையில் மூலப்பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். மேலும் நாட்டில் உள்ள அனைத்து மூலப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியில் 40 சதவீதத்தை இந்தியாவில் உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உறுதியான நடவடிக்கை மூலமாக மூலப்பொருட்களை விலை உயர்வை கட்டுப்படுத்தி சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அழியும் முன் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.