• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூலப்பொருட்கள் விலை உயர்வு – மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் – பி.ஆர்.நடராஜன்

December 19, 2020 தண்டோரா குழு

மூலப்பொருட்கள் விலை உயர்வு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மூலப்பொருட்களின் கடும் விலை உயர்வால் தொழில் நடத்த முடியாத நிலைக்கு சிறுகுறு தொழில்கள் தள்ளப்பட்டுள்ளன. இதன்காரணமாக கோவையில் வார்ப்பட தொழில் முனைவோர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து கடந்த நான்கு நாட்களாக நடத்தி வருகின்றனர். 400க்கும் மேற்பட்ட வார்ப்பட ஆலைகள் முழுமையாக மூடப்பட்டு இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பணியாற்றுகிற சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் எவ்வித சலனமும் இல்லாமல் உள்ளது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. தொழில் நடத்த முடியாத நெருக்கடியில் தள்ளப்பட்டே வேறு வழியின்றி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கண்கூடாக தெரிகிறது. வார்ப்பட தொழில் சார்ந்த மூலப்பொருட்கள் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்கிற முக்கியமான கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில் இந்த மூலப்பொருட்களின் கட்டுபாடற்ற விலை உயர்வு வார்ப்பட தொழிலை மட்டுமல்லாது இதனை சார்ந்த அனைத்து தொழில்களுக்குமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நெருக்கடியை எதிர்கொண்டு வார்ப்பட தொழில்முனைவோர் விலை உயர்வை அறிவித்து பொருட்களை உற்பத்தி செய்து சந்தைக்கு வந்தால் அது நேரிடையாக நுகர்வோராகிய பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். தங்கம் விலை போன்று அன்றாடம் மூலப்பொருட்களின் விலை உயர்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நூறு சதவீதம் நியாயமான கோரிக்கையாகும். மேலும் திட்டமிட்டே மூலப்பொருட்களை பதுக்கிவைத்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தி செயற்கையாக விலையேற்றம் செய்யப்படுகிறதோ என்கிற இவர்களின் அச்சத்தையும் புறந்தள்ள முடியாது. ஏன் விலை ஏற்றம் என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தொழில்முனைவோர்கள் எழுப்பும் கேள்விக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது.

நியாயமான கோரிக்கைக்காக போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் சிறுகுறு தொழில்முனைவோர்களின் கோரிக்கைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் என்னுடைய முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு மூலப்பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகள் குறித்து தெளிவு படுத்த வேண்டும். இதற்காக ஒரு ஆய்வு கமிட்டி அமைக்க வேண்டும்.தொழில்முனைவோர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக செவிசாய்க்க வேண்டும். ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சுமார் 8 மாத காலம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாய் இழந்து பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது மூலப்பொருட்களின் விலை உயர்வால் தொழிற்கூடங்கள் கதவடைப்பு செய்திருக்கிற நிலையில் மேலும் தொழிலாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

தற்போது வார்ப்பட தொழில் முனைவோர்களின் போராட்டத்தின் அடுத்த கட்டமாக சிறுகுறு தொழில்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்கூடங்கள் மூடப்பட்டால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்த விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்முனைவோர்கள் முன்வைத்திருக்கிற நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க