February 28, 2018
தண்டோரா குழு
கோவையில் இருந்து திருச்சூருக்கு கால் டேக்ஸியில் மூன்று ரூபாய் மட்டுமே வைத்து கொண்டு 350 கிலோ மீட்டர் வரை பயணித்த ஒருவர் கட்டணம் தர மறுத்ததால் அவரை பொதுமக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருச்சியை சேர்ந்த முஸ்தபா என்ற நபர் நேற்று மாலை திருச்சியியில் இருந்து பேருந்து மூலமாக கோவையில் உள்ள சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கி உள்ளார். அப்போது தான் கேரளா மாநிலம் திருச்சூருக்கு செல்ல வேண்டும் என கூறி அங்கிருந்து கால் டேக்சி ஒன்றை பிடித்து சென்று உள்ளார். அங்கு உள்ள தனது உறவினர்களிடம் இருந்து கட்டணத்தை பெற்று தருவதாகவும் கூறி உள்ளார்.இதனால் கால் டேக்சியின் ஓட்டுனர் தனது சொந்த பணத்தை செலவு செய்து அவரை திருச்சூருக்கு அழைத்து சென்று உள்ளார்.
இந்நிலையில் அங்கு அவர் வைத்து இருந்த முகவரியை கண்டு பிடிக்க முடியாததால் பல இடங்களில் தேடிய பின்னர் மீண்டும் கோவைக்கு வந்து உள்ளார். அப்போது வடவள்ளி பகுதிக்கு அருகே வந்த போது, ஓட்டுனர் கனகராஜ் பயணித்த கட்டண பணத்தை கேட்டு உள்ளார். அப்போது வாக்கு வாதத்தில் ஈடுபட்ட முஸ்தபா பணம் தர முடியாது என கூறியதோடு ஓட்டுனரை தாக்கவும் முற்பட்டு உள்ளார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி முஸ்தபாவை கடுமையாக தாக்கினர்.மூன்று ரூபாய் மட்டும் வைத்து கொண்டு 350 கிலோ மீட்டர் வரை அவர் பயணித்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை காவல் துறையிடம் பொதுமக்கள் சேர்ந்து ஒப்படைத்தனர்.