December 23, 2020
தண்டோரா குழு
சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியராக்குவது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பி எஸ் என் எல் அருகே நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பி எஸ் என் எல் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கவும், ஒய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணிக்கொடையை 5 லட்ச ரூபாய் வழங்கவும், மாத ஒய்வூதியமாக 2000 ரூபாயிலிருந்து 7500 ரூபாயாக உயர்த்துதல் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும் குழந்தைகளுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குவதை விட பள்ளிகளை திறந்து அவர்களுக்குரிய ஊட்டச்சத்து உணவுகளை வழங்க வலியுறுத்தினர். மேலும் பள்ளி நாட்களில் குழந்தைகளுக்கு மாதம் 22 முட்டைகள் வழங்கப்பட்டு வந்தது தற்போது 10 முட்டைகளாக குறைந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.