February 3, 2018
தண்டோரா குழு
மூக்கு கண்ணாடி வாங்கிய செலவாக அரசிடம் ஆவணங்கள் தாக்கல் செய்து கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ரூ. 50 ஆயிரம் பெற்றுள்ளதாக சர்ச்சை உருவாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கட்சி முன்னணி ஆட்சியில்இருக்கிறது. அங்குள்ள சட்டசபையின் சபாநாயகராக ஸ்ரீராமகிருஷ்ணன் இருந்து வருகிறார். அம்மாநிலத்தில் நேற்று தாக்கல் செய்த 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில் கடும் நிதிக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டு சிக்கனம் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த டிபி.பினு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சட்டசபை செயலர் அளித்த பதிலில், சபாநாயகர் 4,900 ரூபாய்க்கு மூக்கு கண்ணாடி பிரேம், 45 ஆயிரம் ரூபாய்க்கு கண்ணாடி லென்சுகளை வாங்கியுள்ளதாகவும், அதற்கான செலவை, அரசு கருவூலத்திலிருந்து பெற்று கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பினு திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது-
கேரள மாநில சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தனக்கு மூக்கு கண்ணாடி வாங்குவதற்காக ரூ.49ஆயிரத்து 900 செலவு செய்து அரசிடம் பணம் பெற்றுள்ளார்.ரூ.4 ஆயிரத்து 900 கண்ணாடியின் பிரேமுக்காகவும், ரூ.45 ஆயிரம் லென்சுக்காகவும் என ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இதேபோல கடந்த 2016ம் ஆண்டு அக்டோர் 5-ம் தேதி முதல் கடந்த ஜனவரி 19ம் தேதி வரை மருத்துச் செலவாக ரூ. 4.25 லட்சம் செலவு செய்ததாக அரசிடம் ஆவணங்கள் தாக்கல் செய்து பணம் பெற்றுள்ளார். மருத்துவர்கள் அறிவுரையின் பெயரில் இதுபோன்ற கண்ணாடிகளை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராமகிருஷ்ணன் வாங்கிய கண்ணாடியின் உண்மையான பில்கள் அனைத்தும் கேட்டேன் ஆனால், என்னிடம் கொடுக்காமல், அதை சட்டமன்ற செயலாளரிடம் கொடுத்துள்ளார் “ எனத் தெரிவித்துள்ளார்.
மாநில அரசு நிதி நெருக்கடியில் உள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.