December 30, 2025
தண்டோரா குழு
கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு தொடர்பாக மேற்கொண்ட தனது 2025ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது. இதில், மக்கள் தற்போது தாங்களாகவே முன்வந்து மருத்துவ காப்பீடு திட்டங்களில் சேருவது, டிஜிட்டல் முறைகளை அதிகம் விரும்புவதும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நுகர்வோரின் மாறிவரும் பழக்கவழக்கங்கள், டிஜிட்டல் பயன்பாடு மற்றும் எந்தெந்த நோய்க்கு அதிக அளவில் உரிமை கோரல்கள் வந்துள்ளன என்பது பற்றியும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, மக்களிடையே மருத்துவ காப்பீடு குறித்து விழிப்புணர்வு அதிகரித்து இருப்பதும், அதிக எண்ணிக்கையில் மருத்துவக் காப்பீடு எடுத்து வருவதும் தெரிய வந்துள்ளது. கடந்த 2023–24 ஆண்டை விட 2024–25ம் ஆண்டில் காப்பீடு செய்தவர்களின் எண்ணிக்கை 27 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவதால், முழுமையான மருத்துவக் காப்பீடு அவசியம் என்கிற விழிப்புணர்வு மக்களிடம் வேகமாகப் பரவி வருவதை இது காட்டுகிறது.இது குறித்து கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மனிஷ் டோடேஜா கூறுகையில், மக்கள் இப்போது முழுமையான மருத்துவக் காப்பீட்டைத் தேடுவதையும், அது குறித்து அறிந்து கொள்வதையும் எங்கள் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
இந்த மாற்றங்களைப் புரிந்து கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு எளிமையான தீர்வுகளை வழங்க நாங்கள் பணியாற்றுகிறோம்.மருத்துவக் காப்பீட்டை எளிதாகப் புரிந்து கொள்ளவும், அனைவருக்கும் கிடைக்குமாறு செய்வதற்கான தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார். பல்வேறு வயதுப் பிரிவினரிடமும் காப்பீடு செய்வது குறித்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து வயதுப் பிரிவினரிடமும் சராசரி காப்பீட்டுத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது. உதாரணமாக, 0 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான சராசரி காப்பீட்டுத் தொகை 2024-25லிருந்து 2025-26 ஆண்டிற்குள் 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இது குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதிகப் பாதுகாப்பை உறுதி செய்வதைக் காட்டுகிறது. இதுதவிர, 2025-26 ஆண்டில் பாலிசிதாரர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட, முதல்முறை காப்பீடு வாங்கும் இளம் வயதினர் ஆவர்.மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் பங்கு கிட்டத்தட்ட 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.2025–ம் ஆண்டில் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட நோய்களை பொறுத்தவரை, டெங்கு, மலேரியா மற்றும் சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களே அதிகம் உள்ளன. மேலும், சுவாசத் தொற்று மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் போன்ற நோய்களுக்கும், புற்றுநோய் மற்றும் மூட்டு வலி போன்றவற்றுக்கும் அதிக அளவில் சிகிச்சை பெறப்பட்டுள்ளது.
தற்போது ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் மருத்துவக் காப்பீட்டை நிர்வகிக்க ஆன்லைனையே அதிகம் விரும்புகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பிடும்போது, இந்த நிதியாண்டின் முதல் பாதியில் காப்பீடு வாங்கும் நோக்கத்துடன் இணையதளத்தைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், சுமார் 30 சதவீத வாடிக்கையாளர்கள் செயலி மூலமாகவே தங்கள் உரிமை கோரல்களை சமர்ப்பித்துள்ளனர், மேலும் 15 சதவீதத்திற்கும் அதிகமானோர் செயலி மூலமாகவே பாலிசியைப் புதுப்பித்துள்ளனர் என்று இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.