January 25, 2020
தண்டோரா குழு
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு பிப்ரவரி 7-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் பாஜக அரசு கடுமையாக விமர்சித்த அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து அதிமுக நீக்கியது. இதற்கிடையில், கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்ட போதிலும் இணையதளத்திலும் தான் பயன்படுத்தும் லெட்டர்பேடிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து,அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கே.சி.பழனிசாமியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை மேல்
விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து மாலையில் கே.சி.பழனிசாமி கோவையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் கைதான கே.சி.பழனிசாமியை பிப்ரவரி 7 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க கோவை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.