August 26, 2021
தண்டோரா குழு
கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா தாக்கத்திலிருந்து தொழில் துறையை மீட்கும் வகையில் தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தியது.
அந்த ஆலோசனைக்கு பிறகு 2021ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதியிட்டு வெளியிடப்பட்ட அரசாணையில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெறும் புதிய கடன்களுக்கு செலுத்த வேண்டிய முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில், முத்திரை வரிக்கு மட்டும் நடப்பாண்டு இறுதி வரை விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அரசாணையில் வெளியிடப்பட்ட அறிவிப்பானது இதுவரை அமலுக்கு வரவில்லை. இதனால் புதிதாக கடன் பெறும் சிறு, குறு நிறுவனங்கள் அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சலுகையின் கீழ் பயன்பெற முடியாத நிலை உள்ளது. மேலும் இந்நிறுவனங்கள் வழக்கமான முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தை செலுத்த வலியுறுத்தப்படும் நிலை உள்ளது.
எனவே தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மேற்கூறப்பட்ட அரசாணையை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், இந்த முத்திரை வரி விலக்கு சலுகையை வரும் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நடப்பு நிதியாண்டு முடியும் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.