September 29, 2018
தண்டோரா குழு
முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நிறைவேற முடியாமல் உள்ள நிலையில், முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு மத்திய அமைச்சரவையும் அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். மத்திய அரசின் இந்த செயல்பாட்டைக் கண்டித்து கோவை மாவட்ட தவ்ஹீத் ஜமாத் சார்பாக தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய மாவட்ட தலைவர் அபுதாஹீர், முத்தலாக் சட்டத்தை சரியாக விளங்காமல் சிலர் முத்தலாக் சொன்னால் திருமண பந்தம் நீங்கி விடும் என்றும் தவறாக விளங்கி வைத்துள்ளனர். இது இஸ்லாத்திற்கு எதிரானது ஆகும். முத்தலாக் மசோதா மூலம் முஸ்லிம்களை சீண்டும் மத்திய அரசு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.